பிள்ளையாரும் முருங்கைகாயும்
முன்னொரு காலத்தில் மருங்காபுரி என்ற நாட்டில்
ஒரு கொடுமைக்கார மாமியாரும் , அவளின் மருமகளும்
வசித்து வந்தனர் . மாமியார் தினமும் மருமகளை கொடுமை
படுத்தி வந்தாள். தினமும் நெல்லுச்சோறு அவள்
மட்டும் உண்டுவிட்டு மருமகளுக்கு வெறும் கேப்பை
களியை மட்டும் கொடுத்தாள். மருமகளும் ஒன்றும் சொல்லாமல் கேப்பை களியை உண்டு
வாழ்ந்துவந்தாள். ஆனால் அவளுக்கு என்றாவது
ஒருநாள் நெல்லுச்சோறு சாப்பிடவேண்டும் என்ற
ஆசை இருந்தது . ஒருநாள் மாமியார் நெல்லு
சோறும் முருங்கைக்காய் சாம்பாரும் வைத்தாள்.
அன்று அவள் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி வந்தது . இதுதான் சமயம் என்று மருமகளும் நெல்லுசோற்றையும், முருங்கைக்காய்
சாம்பாரையும் தண்ணீர் குடத்தில் மறைத்து எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு சென்றாள்.
பின்பு அதன் அருகில் உள்ள ஒரு பிள்ளையார்
கோவிலுக்குள் சென்று அதனை சாப்பிட ஆரம்பித்தாள். அந்த முருங்கைக்காய் சாம்பாரின்
வாசனை பிள்ளையாருக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே பிள்ளையார் அந்த பெண்ணிடம் "பெண்ணே ! எனக்கு ஒரு முருங்கைக்காய் கொடு" என்று கேட்டார். அதற்கு அந்தப்பெண் "பிள்ளையாரே! என்னை மன்னித்து விடுங்கள். நானே இன்று தான் என் மாமியாருக்கு தெரியாமல் இதனை எடுத்து வந்தேன். இதில் யாருக்கும் பங்கு கொடுக்க முடியாது " என்று மறுத்து விட்டாள். உடனே பிள்ளையாருக்கு கோபம் வந்து திரும்பி அமர்ந்து விட்டார். மறுநாள் அந்த கோவிலுக்கு வந்த மன்னர் பிள்ளையார் திரும்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு எவ்வளவோ முயற்சி
செய்தும் பிள்ளையாரை திருப்ப முடியவில்லை. உடனே மன்னர் பிள்ளையாரை திருப்புவோருக்கு ஏராளமான பரிசு தருவதாக அறிவித்தார். இந்த சமயம் வெளியூருக்கு சென்ற மாமியார் வீடு திரும்பினாள். வீட்டில் சோறும் சாம்பாரும் மருமகள் சாப்பிட்டுவிட்டதை அறிந்து அவளை அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டாள். மருமகளும் வேறு வழியின்றி ஆற்றங்கரைக்கு வந்து பிள்ளையார் கோவிலில் அமர்ந்தாள். அந்த நேரத்தில் மன்னரின் அறிவிப்பைப் பற்றி கேள்விப்பட்டாள். உடனே அங்குள்ள காவலரிடம் பிள்ளையாரின் சிலையை தான் திருப்புவதாக கூறினாள். காவலர்கள் இதனை மன்னரிடம் தெரிவித்தனர். மன்னரும் அந்தப்பெண்ணை அழைத்து "பெண்ணே! உன்னால் பிள்ளையாரை திருப்ப முடியும் எனில் உனக்கு ஏராளமான பரிசுகள் தருகிறேன் " என்றார். உடனே அந்தப்பெண் " மன்னா! என்னால் நிச்சயமாக பிள்ளையாரை திருப்ப முடியும் . ஆனால் அதற்கு இரண்டு நிபந்தனைகள் எனக்கு முதலில் நெல்லுச்சோறும் முருங்கைக்காய் சாம்பாரும் ஒரு குடமும் வேண்டும் . பின்பு நான் கோவிலுக்குள் செல்லும் போது அங்கு யாரும் வரக்கூடாது " என்றாள். மன்னரும் அவ்வாறே ஆணையிட்டார் . இவளும் கோவிலுக்கு சென்று திரும்பி அமர்ந்து இருக்கும் பிள்ளையாரின் முன்பாக சென்று அமர்ந்து வழக்கம் போல் நெல்லுச்சோற்றையும், முருங்கைக்காய் சாம்பாரையும் ருசித்து உண்ண ஆரம்பித்தாள் . சாம்பாரின் வாசனை பிள்ளையாரின் மூக்கை துளைத்தது . உடனே பிள்ளையாரும் வழக்கம் போல் அவளிடம் "பெண்ணே ! ஒரு முருங்கைக்காய் கொடு" என்றார். அவளும் அதற்கு
மறுத்துவிட்டாள். உடனே பிள்ளையார் கோபமாக திரும்பி அமர்ந்து விட்டார் . அவளும் பிள்ளையாரை திருப்பிவிட்ட மகிழ்ச்சியோடு மன்னரிடம் சென்று நிறைய பரிசு பெற்று செழிப்பாக வாழ்ந்தாள்.
1 கருத்து:
ithu nakaichuvaikkaka mattume yarum thavaraka ennivida vendaam nandri
கருத்துரையிடுக